\
CV Shanmugam question in at Aiadmk stand
இபிஎஸ், சிவி சண்முகம்புதிய தலைமுறை

”எனக்கே தெரியவில்லை..” அதிமுகவில் இருப்பது குறித்து சி.வி.சண்முகம் பதில்!

அதிமுகவில் நீடிப்பதா, தவெகவில் சேர்வதா என சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவரே இன்று பதிலளித்துள்ளார்.
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் பெருத்த தோல்வியடைந்த அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுகவின் ஒரு தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் அவர்களுடைய கட்சிப் பொறுப்புகளை இபிஎஸ் பறித்து உத்தரவிட்டார். இதற்கிடையே, தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமி பக்கம் வந்தார்கள். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்ட இபிஎஸ், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு அவர்களுக்கு வேறு பொறுப்புகளை வழங்கினார். ஆனாலும் இதில் அவர்களுக்கு அதிருப்தி நிலவுவதாகவும், அவர்களும் இபிஎஸ்ஸுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகியதுடன், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார்கள். தொடர்ந்து, இன்னும் மூத்த நிர்வாகிகள் சிலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது முதல், சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. இதனால், அவர்களுக்குள் இன்னும் மோதல் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இபிஎஸ் தலைமையை சி.வி.சண்முகம் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், அதிமுகவில் நீடிப்பதா, தவெகவில் சேர்வதா என சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சி.வி.சண்முகம் வீட்டுக்கு தவெக கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்துப் பேசிய சி.வி.சண்முகம், “நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com