திருச்சி: ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் - நகைக்கடை முற்றுகை

திருச்சியில் பிரபல நகைக்கடை ஒன்று, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் முற்றுகை மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல் போராட்டம்pt desk

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல நகைக்கடைக்கு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கிளைகள் உள்ளன.

இந்நிலையில், இந்த நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி அடிப்படையில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயும், 10 மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் ஆகியவை வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நகைக்கடை
நகைக்கடைpt desk

இதை நம்பிய பல வாடிக்கையாளர்கள் 5 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தன.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஓரிரு வாரங்களில் பணம் தருவதாக நகைக்கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால்,திருச்சி கடையை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தில்லைநகர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். திருச்சி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அமைதியாக அனைவரும் கலைந்து சென்றனர்.

இப்படியான சூழலில் இதுகுறித்துப் பேசியிருக்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர், " இரண்டு நாட்களா நிறைய தவறான தகவல்கள் வந்துக்கிட்டு இருக்கு. எங்களுடைய அதிகபட்ச நிலுவைத் தொகையே 32 கோடிதான். அதையும் விரைவில் எங்களிடம் இருக்கும் அசையா சொத்துக்களை வைத்து திருப்பிக் கொடுத்துவிடுவோம். நூறு கோடிக்கு அதிகமான தொகையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள் என்பதெல்லாம் வதந்தி. நாங்கள் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான முதிர்வுத்தொகையை இன்னும் இரண்டு மாதங்களில் கொடுத்துவிடுவோம். " என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com