வடமாநிலங்களில் ஊரடங்கு: ஈரோட்டில் ரூ.100 கோடி அளவிற்கு ரயான் துணிகள் உற்பத்தி பாதிப்பு
கொரோனா காரணமாக வடமாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ரயான் துணிகள் தேக்கம். ஈரோட்டில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
ஈரோடுமாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு ஆகிய பகுதிகளில் ஆயித்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 75 ஆயித்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. இங்கு முதன்மையாக ரயான் துணிகள் உற்பத்தியும், இரண்டாவதாக அரசின் இலவச வேட்டி சேலைகளும் காட்டன் துணிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் டையிங்கிற்காக வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல்வேறு வண்ணங்களாக மாற்றப்பட்டு மீண்டும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதையொட்டி தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் முழு ஊரடங்கும் மீதமுள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் வாரத்தின் கடைசி நாள் ஊரடங்கும் அந்தந்த மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.
இந்த ஊரங்கு உத்தரவினால் அந்த மாநிலங்களில் டையிங் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரயான் துணிகள் வடமாநிலங்களுக்கு டையிங்கிற்கு அனுப்ப முடியாமல் கடந்த 20 நாட்களாக தேக்கம் அடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஈரோடு மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை பெற்றுவரும் தொழிலாளர்கள் என 50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 நாட்களில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.