கடலூர்: பட்டாக்கத்தியால் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் - நீதிகேட்டு மக்கள் சாலை மறியல்!

விருத்தாசலத்தில் நேற்று நள்ளிரவு இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் நீதிகேட்டு மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
road blocked
road blocked pt desk

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பம் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறையில் ஜெயராஜ் என்பவரின் சடலம் அடக்கம் செய்யும் நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்வுக்கு சென்ற இளைஞர்கள் 7 பேர் மதுபோதை மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. போதையிலேயே அவர்கள், புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்துள்ளனர். இதனை அங்கிருந்த ஆறுமுகம் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

accused
accusedpt desk

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 7 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த ஆறுமுகத்தின் மகன் சீனிவாசனையும் தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த இளைஞர்கள் 7 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்நிலையில், தப்பிச் சென்ற இளைஞர்கள் நேற்றிரவு பட்டாக்கத்தியுடன் மீண்டும் புளியங்குடி பகுதிக்கு சென்று கத்தியைக் காட்டி அப்பகுதி வழியாக சென்றவர்களை அசிங்கமாக திட்டி மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அப்பாஸ் (38) என்பவரை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது இரண்டு பேர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து மீண்டும் தப்பிச் சென்றனர். பொதுமக்கள் அந்த இருவரையும் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்ததோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

public
publicpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விருத்தாசலம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தியதோடு, அவர்கள் கட்டி வைத்திருந்த ராஜ் மற்றும் அசோக் குமார் ஆகிய 2 இளைஞர்களையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காயம் அடைந்த அப்பாஸ் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com