வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டம்!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என நெக்குருகிய வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபை முன்பாக இப்போது போராட்டம் வெடித்திருக்கிறது. என்ன காரணம்?
வடலூர்
வடலூர்முகநூல்

செய்தியாளர்: கே.ஆர்.ராஜா

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என நெக்குருகிய வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபை முன்பாக இப்போது போராட்டம் வெடித்திருக்கிறது. என்ன காரணம்?

ஜீவகாருண்யம், அகிம்சையை போதித்த வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவி பசிப் பிணி தீர்க்கும் ஒப்பற்ற பணியை மேற்கொண்டார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அன்னதானத்திற்காக அடுப்பெரிக்க மூட்டப்பட்ட நெருப்பு தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

இறைவனுக்கும் பேதமில்லை; இறை படைப்புகளுக்கும் பேதமில்லை என்பதை உணர்த்த ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஏழு திரை விலக்கி காட்டும் ஜோதியை காண சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள், மக்கள் என திரளாக ஒன்று கூடுவார்கள். தற்போதும் அதே மக்கள் திரள் வள்ளலார் தெய்வ நிலைய பெருவெளி முன்பாக கூடியிருக்கிறது. இம்முறை ஜோதி தரிசனத்திற்காக அல்ல. நூறு கோடி ரூபாய் மதிப்பில் சத்திய ஞான சபை வளாகத்தில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மக்கள் திரள் இது.

குறிப்பாக வள்ளலாருக்கு நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சர்வதேச மையம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கடந்த திங்கள்கிழமை அன்று சர்வதேச மையம் அமைப்பதற்காக பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். வள்ளலார் விரும்பியதை போல பெருவெளியில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது, சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

வடலூர்
"இந்தியாவின் முதல் எதிரி பிரதமர் மோடி தான்..என் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்" - வைகோ ஆவேசம்!

பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். அதே நேரம் சர்வதேச மைய கட்டுமானப் பணியை நிறுத்தாவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, மக்களவை தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக பார்வதிபுரம் கிராம மக்கள் எச்சரித்தனர்.

இதனால், வடலூரில் இயல்பு நிலைக்கு எதிரான சூழல் நிலவியதால் சத்திய ஞான சபை முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்காக வடலூர் வந்திறங்கிய சன்மார்க்க அன்பர்கள், பக்தர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com