\
cuddalore thiyagavalli village peoples protest in vs SIPCOT
Sipcot protestPuthiya Thalaimurai

சிப்காட்-க்கு எதிர்ப்பு.. தரையில் விழுந்து புரண்டு போராடிய மக்கள்.. கடலூரில் பரபரப்பு!

1,100 ஏக்கர் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. கடலூர் மாவட்ட தியாகவல்லி ஊராட்சி கிராம சபையில் தரையில் புரண்டு போராடிய மக்களால் பரபரப்பு நிலவியது.
Published on: 

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி & ஸ்ரீதர்

கடலூரில் சிப்காட் விரிவாக்கத்திற்காக 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தியாகவல்லி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு பேட்ச் அணிந்து வந்த அவர்கள், தரையில் விழுந்து புரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தியாகவல்லி ஊராட்சியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அனைவரும் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ச் அணிந்து வந்தனர். 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஏற்கெனவே கடலூரில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலைகளால் நச்சுக்காற்று மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைச் சந்தித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.

Sipcot protest
Sipcot protestPuthiya Thalaimurai

விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்தப் பகுதி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் அரிய வகை வெட்டிவேர் இங்கு உற்பத்தி செய்யப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். எனவே, விவசாய நிலங்களை அழித்து சிப்காட் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்றும், 1,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனை வலியுறுத்தி, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தரையில் விழுந்து புரண்டு, “எங்களுக்கு சிப்காட் வேண்டாம்” என முழக்கமிட்டனர். தொடர்ந்து, சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com