விருத்தாசலத்தை அடுத்த இருசாலகுப்பம் கிராமத்தில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியினர் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் இருசாலகுப்பம் கிராமத்தில் உள்ள கவனை, சித்தேரிகுப்பம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஊராட்சி இணைப்பு சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல சிரமப்படுவதாகவும், இருசக்கர வாகனம், சரக்கு வண்டிகள் செல்ல இடையூறுகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குறை கூறியுள்ளனர். அத்துடன் மழை காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறுவதால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாவதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சாலையை சீரமைக்க கோரி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

