சுருக்குமடி வலையில் மீன் பிடித்தால் பறிமுதல் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு ஒருதரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் மீனவர்களுக்குள் மோதல் ஏற்பட்ட நிலையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 30ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து லாரி மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையறிந்து, விருத்தாசலத்தில் மீன்வளத்துறை, காவல்துறை கூட்டு நடவடிக்கைக்குழு மடக்கிப்பிடித்து 121 பெட்டிகளில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை பறிமுதல் செய்தது. அத்துடன் சுருக்குவலையை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.