ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட கடலூர் ஆட்சியர் உத்தரவு
பயனற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட கடலூர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட 235 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீதமுள்ள பயனற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து 31ஆம் தேதி மாலைக்குள் மூட வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள பயனில்லா ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் வேலூர் மாவட்டத்தில் முறையாக பராமரிப்பு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களிடம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.