கடலூர் |ஆற்றில் குதித்தவரை போராடி காப்பாற்றிய சகோதரர்கள்! மூவரும் சிக்கித்தவிப்பு! என்ன ஆச்சு?
கடலூர் மாவட்டம் குடும்ப தகறாறு காரணமாக விரக்தியில் ஆற்றில் குதித்த ஒருவரை காப்பாற்றிய சகோதரர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை காரணமாக கடலூர் கெடிலம் ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆகையால் மக்கள் அங்கே செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கம்மியம் பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்தி மற்றும் முத்து ஆகிய சகோதரர்கள் ஆற்றில் ஓடும் நீரை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம், கம்மியம்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்து கெடிலம் ஆற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த சகோதரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து ஆற்றில் குறித்து வெள்ளத்தில் நீந்தி, ராஜ்குமாரை காப்பாற்றினர். அவரை இழுத்துக்கொண்டு ஆற்றின் நடுவே உள்ள பழமையான கிணற்றில் மூவரும் தஞ்சம் அடைந்தனர்.
ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியதால், மூவரும் ஆற்றில் இருந்து கரைக்கு திரும்ப முடியாத நிலை இருந்துள்ளது. இவர்களின் நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனபிறகு காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறை இணைந்து ஆற்றின் நடுவே சிக்கிய மூவரையும் கயிறு மற்றும் படகு மூலமாக காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.
இதில் சகோதர்களில் ஒருவரான கார்த்தி என்பவர் கூறுகையில், ”ஆற்றில் குதித்தவர் பெயர் ராஜ்குமார். கம்மியம்பேட்டை சேர்ந்தவர். குடும்ப பிரச்னை காரணமாக ஆற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற நினைத்த நாங்கள் எங்கள் உயிரைப் பொருட்படுத்தாது ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றினோம்” என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தை தெரிந்துக்கொண்ட மக்கள் சகோதரர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.