ப்ளூவேல் விளையாடினால் கடும் நடவடிக்கை: புதுவை முதல்வர் எச்சரிக்கை
புதுச்சேரியில் ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய, தேவைப்பட்டால் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ப்ளூவேல் விளையாட்டால் 130க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த விளையாட்டு இந்தியாவிலும் பரவி தற்போது தமிழகம், புதுச்சேரியில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "குழந்தைகள் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபடுகின்றனரா என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் சசிகாந்த போரா, ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்." என கூறினார்
மேலும் பேசிய அவர் "புதுச்சேரியில் ப்ளூவேல் விளையாட்டு தாக்கம் இருக்கிறதா என சைபர் க்ரைம் மூலம் விசாரித்து வருகிறோம். ப்ளூவேல் விளையாட்டிற்குள் நுழைந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அந்த விளையாட்டில் இருந்து வெளியே வர வேண்டும். மத்திய அரசு ப்ளூவேல் விளையாட்டை விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புதுச்சேரியில் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.