எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பிரத்யேக கொரோனா கவச உடைகளை வழங்கிய சிஆர்பிஎஃப்

எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பிரத்யேக கொரோனா கவச உடைகளை வழங்கிய சிஆர்பிஎஃப்
எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு பிரத்யேக கொரோனா கவச உடைகளை வழங்கிய சிஆர்பிஎஃப்

எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு, மறுபயன்பாட்டுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட 40 கொரோனா கவச உடைகளை, மத்திய பாதுகாப்பு படை இலவசமாக வழங்கியுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரோனா மூன்றாம் அலையில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றி வரும் காவல்துறையினர் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 அலைகளைச் சேர்த்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளான காவல்துறையின் எண்ணிக்கை 548 ஆக உள்ளது.

பாதிப்பிற்குள்ளான காவல் துறையினர் பலர் வீட்டுத் தனிமையிலும், இணை நோயுடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவச உடைகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சி.ஆர்.பி.எஃப் சார்பில் மறு பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கபட்டது. முதற்கட்டமாக 40 கவச உடைகளை சி.ஆர்.பி.எஃப் படையின் 97-வது பட்டாலியன் கமாண்டண்ட் எரிக் கில்பர்ட் ஜோஸ், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு வழங்கினார்.

இதன்பின்னர் சி.ஆர்.பி.எஃப். கமாண்டண்ட் எரிக் கில்பர்ட் ஜோஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாராஷூட் தயாரிக்கும் மெட்டீரியல் மூலம் இந்த உடை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு கவச உடையின் விலை 9 ஆயிரம் ரூபாய். முதற்கட்டமாக எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு 40 கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கவச உடைகளை 100 அல்லது 200 முறைக்கும் மேல் கூட துவைத்து மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நந்தம்பாக்கத்தில் காவல்துறையினருக்கென கொரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான கவுன்சிலிங், சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சி.ஆர்.பி.எப் மூலம் முதற்கட்டமாக 40 பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து வழங்கவும் வழிவகை செய்யப்படும்" என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com