குடிபோதை.. ஆபாச வார்த்தை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரகளை செய்த குற்றப்பிரிவு காவலர்

குடிபோதை.. ஆபாச வார்த்தை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரகளை செய்த குற்றப்பிரிவு காவலர்
குடிபோதை.. ஆபாச வார்த்தை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரகளை செய்த குற்றப்பிரிவு காவலர்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குடிபோதையில் ரயில்வே போலீசாரை ஆபாசமாக பேசி எச்சில் துப்பிய குற்றப்பிரிவு காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. சீருடையில் குடிபோதையில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருபவர் சபரி குமார். இவர் நேற்று சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு டீ குடிப்பதற்காக சென்ற ஒருவரை பிடித்து காவலர் சபரி குமார் விசாரித்தார். அப்போது காவலர் சபரிகுமார் குடிபோதையில் இருந்தாக தெரிகிறது. விசாரணையில் அந்த நபர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஜாவித் என்பது தெரிந்தது. டெல்லி செல்வதற்காக ஜாவித் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார்.

குடிபோதையில் இருந்த காவலர் சபரிகுமார் ஜாவித்திடம் நடைமேடை டிக்கெட் கேட்டுள்ளார். நான் ஊருக்கு செல்கிறேன். டிக்கெட் இருப்பதாக கூறி உள்ளார். ஆனாலும் காவலர் சபரி குமார் குடிபோதையில் ரயில் பயணி ஜாவித்துடன் தகராறில் ஈடுட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அமீத் குமார் மீனா என்பவர் வந்து விசாரித்தார். அவருடனும் காவலர் சபரி குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தமிழக ரயில்வே காவல்துறை சபரி குமாரை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு இருந்த ரயில்வே போலீசாருடன் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் குணசேகரன், காவலர் அமின் அகியோருடன் சபரி குமார் தகாத வார்த்தைகளால் பேசியும் நாற்காலியில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு அவர் மீது எச்சில் துப்பி அசிங்கமாக பேசியதால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதையில் இருந்த காவலர் சபரிகுமாரை பெரியமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போதும் அவர் யாரையும் மதிக்காமல் அனைவரையும் ஆபாசமாக திட்டி விட்டு "என்னுடைய தம்பி வக்கீலாக உள்ளார் என்னை ஒன்றும் செய்ய முடியாது, எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விட்டார்.

இந்நிலையில் காவலர் சபரி குமார் குடிபோதையில் ரயில்வே போலீசாருடன் தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன், காவலர் அமினுடன் போதையில் தகராறில் ஈடுபடும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த போது காவலர் சபரி குமார் கிண்டல் செய்யும் செயலும் பதிவாகி உள்ளது.

தகவல் அறிந்து இன்று காலை கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் பெரியமேடு காவல் நிலையத்திற்கு வந்து துறைரீதியிலான விசாரணை நடத்தி வருகிறார். செல்போனில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார். காவலர் சபரி குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. ரயில்வே போலீசாரிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com