போலி டெபிட் கிரெடிட் கார்டு மோசடி.. எப்படி அரங்கேறுகிறது?
நமது டெபிட் கிரெடிட் கார்டுகளில் உள்ள விபரங்களைத் திருடி போலி கார்டுகளைத் தயார் செய்து மோசடி செய்யும் பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது எப்படி நடைபெறுகிறது?
ஈஸி டிராக்கர் சிப் என்றழைக்கப்படும் நவீன ஸ்கிம்மர் கருவியை மோசடி பேர்வழிகள் தங்களுடைய வங்கி டெபிட் கார்டில் ரகசியமாகப் பொருத்துகின்றனர். அதிக வாடிக்கையாளர்கள் வரும் கடைகளுக்குச் சென்று அந்த கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்கின்றனர். இந்த கார்டை பயன்படுத்தி உடனே ஸ்வைப் செய்ய முடியாது. இரண்டு, மூன்று முறை ஸ்வைப் செய்த பிறகுதான் பொருட்களை வாங்க முடியும். காரணம், அந்த கார்டில் இருக்கும் ஈஸி டிராக்கர் சிப். இது கடையில் இருப்பவர்களுக்குத் தெரியாது. இப்படி அடுத்தடுத்து ஸ்வைப் செய்யும்போது அதில் இருக்கும் ஈஸி டிராக்கர் சிப், ஸ்வைப் மிஷினில் பொருந்திவிடும்.
அடுத்ததாக அந்த மிஷினில் தேய்க்கப்படும் கார்டுகளின் அனைத்துத் தகவல்களும் ஈஸி டிராக்கர் சிப்பில் பதிவாகிவிடும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே கடைக்குச் சென்று அந்த மோசடி நபர் ஷாப்பிங் செய்வான். தன்னுடைய கார்டை ஸ்வைப் செய்தால் அந்த மிஷினில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட ஈஸி டிராக்கர் சிப் மீண்டும் அந்த நபரின் கார்டில் ஒட்டிக்கொள்ளும். இடைப்பட்ட இரண்டு நாட்களில் இந்த மிஷினில் தேய்க்கப்பட்ட கார்டுகளில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மோசடி நபரின் கார்டுக்கு வந்துவிடும். இப்படித்தான் கார்டுகளின் விவரங்களைத் திருடி மோசடியை அரங்கேற்றுகிறார்கள். போலியாக கிரெடிட், டெபிட் கார்டுகளைத் தயாரித்து மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
அக்கவுன்டிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விவரம் நமக்குத் தெரியவந்தாலும், அந்த மோசடி எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஈஸி டிராக்கர் சிப்பைப் பயன்படுத்தும் மோசடி பேர்வழிகளின் முகவரிகள் எல்லாம் பொய்யானவை. அதனால் அவர்களைக் கண்டுபிடிப்பதும் சிக்கல்தான். தென்கொரியாவைச் சேர்ந்த சில மாணவர்கள்தான் இந்த மோசடியில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்த மோசடியில் ஈடுபட்டு சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறுகின்றனர்.