பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்ட பாலம் விரிசல்- முறைகேடு நடைபெற்றதா என விசாரிக்க கோரிக்கை

பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்ட பாலம் விரிசல்- முறைகேடு நடைபெற்றதா என விசாரிக்க கோரிக்கை
பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்ட பாலம் விரிசல்- முறைகேடு நடைபெற்றதா என விசாரிக்க கோரிக்கை

குமரி மலையோர பகுதியில் பழங்குடியின காணியின மக்களின் நலன் கருதி கட்டப்பட்ட பாலங்கள் இரண்டும், திறப்புவிழா கண்ட சில மாதங்களே ஆகிய நிலையில் விரிசல் ஏற்ப்பட்டு சேதம் ஏற்ப்பட துவங்கிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்தி கண்டறிந்து, முறைகேடு நடத்திய அதிகாரிகள் மீதும் ஒப்பந்தக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குமரி மாவட்ட மலையோர பகுதியான மோதிரமலை பகுதியில் இருந்து குற்றியார் செல்லும் சாலையில் கோதையார், நீலைத்தோடு மற்றும் குற்றியார் பகுதியில் கல்லார் என மூன்று ஆறுகள் உள்ளது. இந்த மூன்று ஆறுகளில் கோதையாற்றின் குறுக்கே தரைமட்ட பாலமும், நீலைத்தோட்டின் குறுக்கே உயர்மட்ட பாலமும், குற்றியார் கல்லாற்றின் குறுக்கே தரை மட்ட பாலமும் அமைத்துதான் மோதிரமலை குற்றியார் சாலை அமைந்துள்ளது. இந்த மூன்று பாலங்களில் இரண்டு தரைமட்ட பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி, மழை காலங்களில் தண்ணீர் பெருக்கு ஏற்ப்பட்டு பழங்குடியின மக்கள் சந்தித்து வந்த பாதிப்புகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று பழங்குடியின மக்கள் தொடர் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் நீலைத்தோடின் குறுக்கே பழுதடைந்து காணப்பட்ட உயர்மட்ட பாலத்திற்க்கு பதிலாக புது பாலம் அமைக்க 28 லட்சம் ரூபாய் நிதியும், குற்றியார் பகுதியில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலத்திற்க்கு பதிலாக உயர்மட்டப் பாலம் கட்டுவதற்க்கு 28-லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு, அந்த பணிகள் 2018ஆம் ஆண்டு பணிகள் துவங்கி, அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து முடிந்தது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த கட்டுமான பணிகள் முடிந்து, பாலம் வழியாக வாகனங்கள் ஓட துவங்கியது. இந்த நிலையில் நீலைத்தோடின் குறுக்கே கட்டப்பட்ட புது பாலத்தின் தரை தளத்தில் காங்கிரேட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் இரு புறங்களில் காங்கிரேட் செய்த பகுதிகளில் விரிசல்கள் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் இந்த விரிசல் வரும் மழை காலங்களில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தி இந்த பாலம் வழியாக போக்கு வரத்து பாதிக்க வாய்ப்புள்ளது.

இதுபோல் குற்றியார் பகுதியில் நீலைத்தோடு பகுதியில் தரை மட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டி முடிக்கப்பட்ட பாலத்திலும் விரிசல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பாலத்தின் ஒரு பகுதியில் சாலையில் பட்டு நின்ற மரத்தை கூட அப்புறப்படுத்தாமல் அந்த மரத்தை அப்படியே நிறுத்தி காங்கிரேட் தளம் அமைத்து சாலை அமைந்ததால் வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வரும் நிலையில், இந்த பாலத்திலும் விரிசல் ஏற்ப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்ப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது, மலையோர பகுதியில் பழங்குடியின மக்களின் நலன் கருதி கட்டப்பட்ட இரு பாலங்களும் கட்டுவதில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஊழல் நடத்தியிருப்பதால் தான் இந்த இரு பாலங்களும் கட்டி முடித்த சில மாதங்களிலேயே விரிசல் ஏற்ப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டுவதுடன், இந்த ஊழலை கண்டுபிடிக்க உயர் மட்ட அதிகாரிகளை வைத்து முறையான விசாரணை நடத்தி இந்த முறைகேடுக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் கேட்ட போது, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com