”கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும்” - பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :"மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?
சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்பு
சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்புpt desk

"மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மீது தமிழக அரசு தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்கச் சென்ற 18 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 2700 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மேல்மா பகுதியில் போராடுபவர்களும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் பெயரில் நிலம் இல்லை என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதால் உழவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க சென்னை புறப்பட்ட அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து சந்திரன், மணிகண்டன், தேவன், பெருமாள், ராஜா, ரேணுகோபால், நேதாஜி, ஏழுமலை, மாசிலாமணி, கணேஷ் ஆகிய 10 உழவர்கள் மேல்மா கூட்டுச் சாலையில் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர்.

உழவர்களின் இந்தப் போராட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை. அவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மேல்மா கிராமத்திற்கு நேற்றிரவு சென்ற காவல்துறை அவர்களில் இரு உழவர்களை கட்டாயமாக கைது செய்து வந்தவாசி மருத்துவமனையில் அனுமதித்ததனர். மீதமுள்ள 8 உழவர்களை இன்று அதிகாலை கைது செய்த காவல்துறை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததால் 8 உழவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மேல்மா போராட்டக் களத்திற்கு சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறு 10 பேர் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அமைச்சர் வேலுவை பதவி நீக்கவேண்டும், அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக 18 பெண்களும், பாண்டியன், அருள் ஆறுமுகம் ஆகிய உழவர்களும் இன்று காலை போராட்டம் நடத்தினர். தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

உடனடியாக அவர்களை கைது செய்த காவல்துறையினர் சிங்காரத் தோட்டம் என்ற இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். தங்களை விடுதலை செய்தாலும் கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் வீடு திரும்பப் போவதில்லை என்று பெண் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மேல்மா உழவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மேல்மா விவசாயிகள் 7 பேரை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்த பிறகு அவர்களை விடுதலை செய்தது. காலம் காலமாக விவசாயம் செய்தவர்களை உழவர்களே அல்ல என்று அமைச்சரே கொச்சைப்படுத்தியது நியாயம் கேட்டு மேல்மாவிலும், சென்னையிலும் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது உள்ளிட்ட தமிழக அரசின் எந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாடு பசியின்றி இருப்பதை உறுதி செய்பவர்கள் உழவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், உழவர்களைப் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் வேலு பேசிய போது, அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமைச்சருக்கு எதிரான தங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்கு விரும்புவதாக உழவர்கள் கூறிய நிலையில், உடனடியாக அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் அவர்களை கைது செய்து அடைத்து வைக்க ஆணையிட்டதன் மூலம், தமது அரசு உழவர்களுக்கு எதிரான அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லாமல் சொல்கிறாரோ என்ற எண்ணமும், ஐயமும் தான் ஏற்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று பிற்பகலுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், முதல்வர் நினைத்திருந்தால் அதன் பின்னர் மேல்மா உழவர்களை சந்தித்து பேசியிருக்க முடியும். ஆனால், உழவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அவர்களை அடக்கி விட முடியும் என்று முதலமைச்சர் நம்புவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நினைத்தால் அவர் நிச்சயம் தோல்வியடைவார். உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது. இதை உணர்ந்து மேல்மா உழவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னையில் மேல்மா பெண் விவசாயிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல் ...

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் நிலம் தர மறுத்து போராடி வரும் விவசாயிகள் மீது சட்டமன்றத்தில் அவதூறு பிரச்சாரம் செய்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலுவின் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரை சந்தித்து மனு முறையிடுவதற்காக இரண்டு தினங்களாக அப்பகுதி விவசாயிகள் முயற்சித்து வருகிறார்கள்.

நேற்று (21.02.2024) திருவண்ணாமலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று 20க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி சென்றவர்களை கைது செய்யப்பட்டு வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்றேன். என்னை (பி.ஆர்.பாண்டியன்) காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேல்மா சிப்காட்டிற்கு எதிராக போராடுபவர் விவசாயிகளே கிடையாது என்றும் அவர்கள் திட்டமிட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் சட்டமன்றத்தில் அமைச்சர் வேலு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரை சந்தித்து முறையிடுவதற்காக அவர்கள் சென்னை வந்துள்ளனர்.எனவே விவசாயிகள் ஒப்புதலின்றி விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது என்றாலும் அது சட்டவிரதம் என்று குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கிறது.

நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் ஆண்டு முழுவதும் பயிரிட்டு வருவதை விளைநிலங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். இந்நிலையில் தரிசு நிலம் என்கிற பெயரில் சிப்காட் அமைக்க முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல.இது குறித்து முதலமைச்சர் சந்தித்து முறையிட வந்த பெண் விவசாயிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

செய்தியாளர்களோ, விவசாயிகள் சங்க தலைவர்களோ, சந்திக்க முடியாத நெருக்கடியான இடத்தில் அடைத்து வைத்திருப்பது தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு எதிரான விரோதப் போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.எனவே என்னை தடுப்பதால் தமிழ்நாடு அரசுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நான் ஏற்று திரும்பி வந்திருக்கிறேன். அதே நேரத்தில் பெண்களை கைது செய்து மிரட்டுவதால் மேல்மா சிப்காட் அமைத்து விட முடியாது என எச்சரிக்கை செய்கிறேன்.

சமூகநீதி பேசும் முதலமைச்சர் நீதிகேட்டு முறையிடுவதற்காக வந்த பெண்களை கைது செய்து அடக்குமுறையை காவல் துறை மூலம் தூண்டுவது நியாயமா? வன்மையாக கண்டிக்கிறேன் உடனடியாக அவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்.

மேலும் இரு விவசாயிகள் மெரினா கடற்கரையில் உளவு பிரிவு காவலரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை தங்கள் ஊடகம் பத்திரிக்கையில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com