‘வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா மொத்தமா வாங்கலே’ - சாலையில் கோரத்தாண்டவமாடிய மாடு!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை மாடு ஒன்று முட்டி தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் மாடு உரிமையாளர்கள் ஈடுபடக்கூடாது என்று மாநகராட்சி எச்சரித்தும் அலட்சியப்போக்கு நீடிக்கிறது.

அந்த வகையில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மாடு ஒன்று சரமாரியாக முட்டத்தொடங்கியுள்ளது. மாட்டைக் கண்டு பொதுமக்கள் சிதறி ஓடிய நிலையில், அவர்களையும் துரத்தி துரத்தி முட்டியது. ஆட்டோவில் நுழைந்தாலும், ஆம்னி வேனில் ஏறினாலும் ‘வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா மொத்தமா வாங்கல’ என்றபடி பொதுமக்களை தொடர்ந்து முட்டியதில் அடுத்தடுத்து 5 பேர் அவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரிக்கையில், வெறி நாய் கடித்ததில் மாட்டுக்கும் வெறிபிடித்து இதுபோன்று முட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மாட்டை அடக்கிப்பிடித்து, அதன் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com