கொரோனா விரைவுச் செய்திகள் மே 19 - தமிழகத்தில் உச்சம் | இ-பதிவு புதிய விதி | கட்கரி யோசனை

கொரோனா விரைவுச் செய்திகள் மே 19 - தமிழகத்தில் உச்சம் | இ-பதிவு புதிய விதி | கட்கரி யோசனை
கொரோனா விரைவுச் செய்திகள் மே 19 - தமிழகத்தில் உச்சம் | இ-பதிவு புதிய விதி | கட்கரி யோசனை

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.

கடந்த வாரத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 7.96 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து 1.66 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளையும் தமிழக அரசு நேரடியாக வாங்கி சேமித்து வைத்துள்ளது.

இந்நிலையில், மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்துள்ளன. மொத்தம் 10.62 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளதால், 18 முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த 1-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் அந்த திட்டம் தாமதமாக தொடங்கப்பட உள்ளது.

  • புதிய நெறிமுறைகள்: கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழு பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம், வேறு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருவோர் 4 முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • முதல்வர் வேண்டுகோள்: கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்கும் அரசின் முயற்சிக்கு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பங்களிப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், நோய் பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை அவர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
  • தமிழகத்தில் புதிய உச்சம்: தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறிதளவு குறைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரே நாளில் மீண்டும் அதிகரித்து புதிய உச்சமாக 34,875 ஆக பதிவாகியுள்ளது. 2 வயதுக்கு உட்பட்ட 1,367 சிறார்கள் ஒரே நாளில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து 365 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து 5ஆவது நாளாக 300க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருக்கின்றன.இணை நோய் இல்லாத 72 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,53,576 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6,297 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 3,250 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,275 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,778 பேரும், திருப்பூரில் 1,573 பேரும், திருச்சி மாவட்டத்தில் 1,459 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
  • இ-பதிவுக்கு புதிய விதிமுறை: திருமண விழாவில் பங்கேற்கும் அனைத்து விருந்தினர்களையும் ஒரே பதிவில் குறிப்பிட வேண்டும் என்பன போன்ற விதிகளுடன் இ-பதிவு முறையை மாற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, திருமண விழாவில் பங்கேற்கும் அத்தனை விருந்தினர்களையும், அனைத்து வாகனங்களையும் சேர்த்து ஒரே இ-பதிவில் குறிப்பிடும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் அவர்களின் தாய், தந்தை என திருமணத்தில் நேரடியாக சார்ந்த இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. விண்ணப்பத்தாரர் பெயர் கண்டிப்பாக திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும், அழைப்பிதழை கண்டிப்பாக இ-பதிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர்களின் பெயர், கைபேசி எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், அடையாள அட்டை அவசியம் எனவும் அரசு கூறியுள்ளது. தவறான தகவல்களை அளித்திருந்தாலோ, ஒரே நிகழ்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவு செய்திருந்தாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
  • மத்திய அரசு எச்சரிக்கை: கொரோனா சூழலை சாதகமாக்கி அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா சூழலை சாதகமாக்கி அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ நடவடிக்கை என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
  • கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் கண்டனம்: சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாகவும் அதனால் இந்தியாவிற்கான அந்நாட்டின் விமானச் சேவையை ரத்து செய்யுமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைக்க தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் எதுவும் இல்லை என சிங்கப்பூர் அரசு தெரிவிக்க டெல்லி முதல்வரின் கருத்து இந்தியாவின் கருத்து அல்ல என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்க உச்ச கட்டமாக குழப்பம் நிலவுகிறது.
  • மூன்றாம் பாலினத்தவருக்கும் ரூ.4,000 வழங்க கோரிக்கை: தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயை மூன்றாம் பாலினத்தவருக்கும் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்தாண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
  • உடல்களை எரிக்க முடியாமல் மக்கள் அவதி: ஈரோடு மாவட்டம் கோபியில் பராமரிப்பு காரணங்களுக்காக தகன பூங்கா மூடப்பட்டுள்ளதால் உடல்களை எரிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கெய்டு அறக்கட்டளை சார்பில் செயல்படும் வரும் தகன பூங்காவில் கடந்த சில தினங்களாக கொரனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தன. மேலும் மாவட்டத்தில் எங்கிருந்து உடல்களை கொண்டு வந்தாலும் இங்கு எறியூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இயந்திரம் பழுது காரணமாக தகன பூங்கா மூடப்பட்டுள்ளதால் உடல்களை எரிக்க கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  • நேர்காணல்: புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப்பணியாளர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா விதிகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர். மருத்துவர்களுக்கு அறுபதாயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சாராய விற்பனை: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் முழு ஊரடங்கு காலத்திலும் சாராய விற்பனை கொடிகட்டிப் பறப்பதாக புகார் எழுந்துள்ளது. முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காடகனூர், பரனூர், சித்தாம்பூர் ஆகிய பகுதிகளில் பத்து ரூபாய் மதிப்புள்ள சாராய பாக்கெட்டுகள் 100 முதல் 150 வரை ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
  • நிதின் கட்கரி யோசனை: இந்தியாவில் கூடுதலாக 10 நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை கூறியுள்ளார். இதற்கு முன் பலரும் இந்த கருத்தை கூறிவந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரே பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
  • 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு: கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், உதகையில் தேயிலை எஸ்டேட் இயங்குவதற்கும், தேயிலை தொழிற்சாலை செயல்படவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கொலக்கம்பை அருகில் கிரேக் மோர், உட்லண்ட்ஸ், மானார் போன்ற தேயிலைத் தோட்டங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாம் என்றும் தேயிலை பறிக்கும் பணியை நிறுத்திவைக்கும் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேயிலை பறிக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 500க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர்.
  • பொதுமுடக்கம் நீட்டிப்பு: தெலங்கானாவில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், இம்மாதம் 30 ஆம் தேதி வரை அங்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • டெல்லி பல்கலை. பேராசிரியர்கள் 35 பேர் உயிரிழப்பு: டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் மூன்று ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைகழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவு தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் என்பது வெளியாகியுள்ளது.
  • சிங்கப்பூர் நிலவரம்: சிங்கப்பூரில் சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபைசர் அல்லது பாரத் பயோடெக் தயாரிக்கும் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் ஏ குங் கூறியுள்ளார். எனவே, வாய்ப்புள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனிடையே கொரோன பரவல் காரணமாக, சிங்கப்பூரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, இணையவழியிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
  • ரெம்டெசிவிர்: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 294 தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு இணையத்தில் முன்பதிவு செய்திருந்தன.
  • பழனிசாமி கோரிக்கை: முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாயை நிவாரண உதவித் தொகையாக வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
  • ஸ்டெர்லைட்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் பின்னர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தடைபட்டது. இதனையடுத்து சிறப்பு வல்லுநர்கள் குழு கோளாறை சரிசெய்ததையடுத்து தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மீண்டும் தொடங்கியது. அந்த வகையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 6 புள்ளி 34 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆக்சிஜன் லாரிக்கு தூப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
  • தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு: சென்னையில் நாள்தோறும் 25 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நாள்தோறும் தற்போது, 19 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும், அதை 25 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 208 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 19 ஆயிரத்து 580 பேர்களுக்கு நபர்களுக்கு கொரோனா தடுப்பூ ஊசி போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மனநல காப்பகத்தில் 11 பேருக்கு கொரோனா: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநல மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மனநல காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் சிலர் இருந்துள்ளனர். இதனையடுத்து காப்பகத்தில் இருந்த 49 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டத்தில் 11 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
  • ஒரே நாளில் 5,500 வாகனங்கள் பறிமுதல்: முழு ஊரடங்கை மீறி சுற்றியதாக சென்னையில் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்து 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 400 ஆட்டோக்கள், 100 இலகு ரக வாகனங்கள் உட்பட சுமார் 5 ஆயிரத்து 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • உச்சத்தில் கொரோனா மரணங்கள்: ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 4,529 பேர் உயிரிழந்தனர்.
  • முதலிடத்தில் தமிழகம்: கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தற்போது வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரவல் என்பது தற்போது கட்டுக்கடங்காமல் அதிகரித்து, உயிர் இழப்பும் உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இன்றைய அறிக்கையின்படி இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com