கொரோனா விரைவுச் செய்திகள் மே 9 - அரசின் நடவடிக்கைகள் முதல் கர்ப்பிணி மருத்துவர் மரணம் வரை

கொரோனா விரைவுச் செய்திகள் மே 9 - அரசின் நடவடிக்கைகள் முதல் கர்ப்பிணி மருத்துவர் மரணம் வரை
கொரோனா விரைவுச் செய்திகள் மே 9 - அரசின் நடவடிக்கைகள் முதல் கர்ப்பிணி மருத்துவர் மரணம் வரை

முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், முழு பொதுமுடக்கத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொற்று பரவலைக் குறைக்க முடியும் என்பதால், அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் முழு முடக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்ட முதல்வர், மருத்துவமனையில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு போன்ற வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஆக்சிஜன் முறையாக பயன்படுத்துவதையும், வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறிய முதல்வர், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கண்காணித்து, கள்ளச்சந்தையில் விற்பனையாவதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிக்கு அமைச்சர்கள் குழு நியமனம் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முழுமையாக வாசிக்க > தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிக்கு அமைச்சர்கள் குழு நியமனம்!

மே 24 வரை முழு முடக்கம்: கட்டுப்பாடுகள் என்னென்ன? - தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மே 24ஆம் தேதி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும். அந்த காலக்கட்டத்தில், தனித்து இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், கூரியர் சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள் திறந்திருக்கும். உரம், விதை, பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12மணிவரை இயங்க அனுமதிக்கப்படும். உணவகங்களில் காலை 6மணி முதல் 10மணி வரை, நண்பகல் 12மணி முதல் 3மணி வரை, மாலை 6மணி முதல் இரவு 9மணி வரை பார்சல்கள் வழங்கலாம். சுவிக்கி, ஸோமோட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக ஊரடங்கு காலத்தில் அம்மா உணகவங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரையும், நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரையும் செயல்பட அனுமதிக்கப்படும். நீதித்துறை, நீதிமன்றங்கள், ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் செயல்படத் தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி வழங்கும் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, இறைச்சி , மீன் கடைகள் தவிர பிற கடைகளை திறக்க அனுமதி இல்லை. அதே போல் தங்கும் விடுதிகள், அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் உள் அரங்குகள், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள், அருங்காட்சிகங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கிடையேயான அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் கனிவாக நடந்துகொள்க - டிஜிபி அறிவுரை: முழு ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காவல் துணை கண்காணிப்பாளர் அனைவரும் தங்களின் கீழ் பணிபுரியும் காவலர்களிடம் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 50 வயதை கடந்த காவலர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு இலகுவான பணிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் காவலர்களை வாகனச் சோதனை போன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், தூய்மைப் பணியாளர் போன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றை எந்த தடையுமின்றி எடுத்துச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊடரங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என்றும், அப்படியே கைப்பற்றினாலும் சில மணி நேரத்தில் அவற்றை விடுவிக்க வேண்டும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுன்னார். மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் ஒவ்வொரு காவலர்களும் கண்டிப்பாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றுமாறு டிஜிபி திரிபாதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவில், வேளாண்துறை முதன்மை செயலராக இருந்து வந்த ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ககன்தீப் சிங் பேடி கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியவர். புயல் போன்ற இக்கட்டான நேரங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால், சென்னையில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா பரவலை திறம்பட தடுத்து நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபில் பிறந்தவரான ககன்தீப் சிங் பேடி கடந்த 2015 ஆம் ஆண்டு கடலூரை புயல் தாக்கியபோது சிறப்பாக செயல்பட்டு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்தார். இதற்காக அவருக்கு சிறந்த இந்தியருக்கான விருது அப்போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிக, தொழில் நிறுவனத்தினரிடம் முதல்வர் ஆலோசனை: முழு பொதுமுடக்க காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கான பாதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் வணிக அமைப்பினர், தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர். முழு பொதுமுடக்க காலத்தில் தொழில்துறையினர் சந்திக்கும் இழப்புகளை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆக்ஜின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் 11ஆம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என தொழில்முறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழில்துறையினர் உடனான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முழு முடக்கத்துக்கு முந்தைய நாளில்... திங்கள்கிழமை முழு முடக்கம் அமல்படுத்த உள்ளதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான கோயம்பேடு உள்ளிட்ட முக்கியப் பேருந்து நிலையங்களில் அலைமோதினர். அதேபோல், தமிழகத்தில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.8,923 கோடி ஒதுக்கீடு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8,923 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்ணீர்க்கடலில் ஆழ்த்தியுள்ள கர்ப்பிணி மருத்துவரின் மரணம்: கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் அயராது பணியாற்றிய கர்ப்பிணி மருத்துவர் ஒருவர், அந்த கொடிய வைரஸால் உயிரிழந்திருப்பது அனைவரையும் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியுள்ளது. வளைகாப்புக்கு தேதி குறித்துச் சொல்கிறேன், அனைவரும் வாருங்கள் எனக் கடைசியாக கூறிவிட்டுச் சென்றவர், இன்று யாரும் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டார். அனைவரது கண்களையும் குளமாக்கிவிட்டு மரணத்தை தழுவியிருக்கும் அவர், மருத்துவர் சண்முகப்பிரியா.

தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள ஓடப்பட்டி சிற்றூரைச் சேர்ந்த மருத்துவர் பழனிசாமிக்கும் - செவிலி பிரேமாவுக்கும் பிறந்த சண்முகப்பிரியாவும், மருத்துவம் பயின்றார். கடந்த 2013இல் சின்னமனூர் மருத்துவமனையில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு மதுரை அனுப்பானடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மருத்துவ அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சண்முகப்பிரியா, சண்முகப் பெருமாள் என்பவரை காதலித்து கரம் பிடித்தார். மருத்துவ சேவையில் ஈடில்லா ஆர்வம் கொண்ட அவர், கொரோனா தொற்று காலத்திலும் இடையறாது பணியாற்றினார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த சண்முகப்பிரியா, அண்மையில் தான் பேறுகால விடுப்புப் பெற்றுச் சென்றுள்ளார்.

அதற்கு முன்னதாகவே, கொரோனா தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆக்சிஜன் சிக்கலின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கர்ப்பிணியாக இருந்ததால் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

சண்முகப்பிரியா உயிருக்குப் போராடிய நிலையில், அவருடைய வயிற்றிலிருந்த 8 மாத சிசு உயிரிழந்தது. தாயின் உயிரையாவது காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தீவிரமாக முயற்சித்தும் கொரோனா சண்முகப்பிரியாவை இரையாக்கிக் கொண்டது. எப்போதும் இன்முகத்துடன் கனிவாகப் பேசி மருத்துவம் பார்த்து வந்த அவரை, இனி பார்க்கவே முடியாது என எண்ணும்போது மனது பதறுவதாகக் கூறுகின்றனர், சக மருத்துவப் பணியாளர்கள்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர் இருவர் உயிரிழப்பு: கொரோனா தொற்று ஏற்பட்ட செவிலியர் இரண்டு பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த இந்திரா என்ற செவிலி சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருதவியல் துறையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அதேபோல், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றி வந்த பிரேமா என்பவருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இருவரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தினர், அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேர் உட்பட 28,897 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 13,80,259 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 1,012 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 23,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,20,064 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 236 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,648 ஆக அதிகரித்துள்ளது. இணை நோய் இல்லாத 47 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 130 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 509 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 279 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 768 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 89 பேரும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 68 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு: சாதாரண கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலே, ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்துகளுக்காக மக்கள் தேடிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர், சென்னை மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்தாண்டு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தின் மூலம் பலரும் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் 21ஸ்கீரினிங் சென்டர்கள் உள்ள நிலையில், மக்கள் தேவையினை கருத்தில் கொண்டு அதனை 30ஸ்கீரினிங் சென்டர்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

நோய் தடுப்புக்காக ஒருங்கிணைந்த கட்டளை மையம்: கொரோனா நோய் பரவலை தற்போது தனியார் மருத்துவமனைகளையும் இணைத்து தற்போது ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படும் ஆபத்தான நோயாளிகளுக்கு வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்துடன் இணைக்கப்பட்டு தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படவுள்ளது. பொதுமக்களின் குறை தீர்ப்புக்காக 104 என்ற எண் மூலம் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை தொடர்பு கொள்ள முடியும். இதற்காக 6 ஐஏஎஸ் கொண்ட திருத்தப்பட்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள செயல் இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது நியிமக்கப்பட்டுள்ளார்.

மாநில ஆக்சிஜன் கண்காணிப்பு மற்றும் உடனடி தேவைப் பணிகளை கவனிப்பதற்காக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை கவனித்துக் கொள்ள டிஆர்டிஏ திட்ட இயக்குநர் டாக்டர் உமா, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு குழுவை ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொள்ள TANGEDCO இணை மேலாண் இயக்குநர் எஸ்.வினீத் அவருடன் வேலூர் துணை ஆட்சியர் ஐஸ்வர்யா, திருவள்ளூர் துணை ஆட்சியர் அனாமிகா ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க டிட்கோ செயல் இயக்குநர் கார்த்திகேயன், கட்டளை மையம் விரைவாக செயல்படவும், உடனடி உதவிகளை வழங்குவதற்கான பணிகளை கவனிக்கவும் டான்ஃபினெட் பொது மேலாளர் அழகுமீனா ஆகியோர் நியிமக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மது விற்பனை: தமிழகத்தில் ஒரே நாளில் 426கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. முழு முடக்கம் அமலுக்கு வருவதால் ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கக் குவிந்தனர். இதனால், சனிக்கிழமை 426 கோடியே 24 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 100 கோடி ரூபாய்க்கும், அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் 87 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் 82 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 79 கோடி ரூபாய் மற்றும் கோவை மண்டலத்தில் 76கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ்: கொரோனா குறித்து வீண் வதந்தி பரப்பியதாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்த் தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில், கொரோனாவை காட்டிலும் 10 மடங்கு வீரியம் கொண்ட என் 440 கே வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வீரியமிக்க இந்த வைரஸால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் மக்களை பயமுறுத்தியாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே வீண் வதந்தி பரப்பி அவர்களை பீதியில் ஆழ்த்தியதாக சந்திரபாபு நாயுடு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதற்கான நோட்டீஸ் அவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய உச்சமாக ஒரே நாளில் 4,092 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3ஆவது நாளாக 4 லட்சத்துக்கும் மேல் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 4 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அமலில் உள்ள ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதுவரை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com