பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை!

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை!
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணுக்கு, காவல்நிலையத்திலும் கொடுமை!

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாகிய பெண், நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் குமாரி கோவையில் உறவினர் வீட்டில் வளர்ந்துள்ளார். பின்னர் தனது மாமா சேர்த்துவிட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் முனிராஜ் என்பவர், குமாரி தனிமையில் இருக்கும் போது அவரிடம் அத்துமீறியுள்ளார். அத்துடன் சத்தம்போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பின்னர் பாலியல் வன்கொடுமை செய்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி, குமாரியை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் முனிராஜ். நாளடைவில் குமாரியின் உடல்நிலை மோசமடைய, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குமாரி கர்ப்பமாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது மாமாவிடம் குமாரி கூறியுள்ளார். பின்னர் மாமாவின் உதவியுடன், கோவை மகளிர் காவல்நிலையத்தில் குமாரி புகார் தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த காவல்நிலையம், முனிராஜை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரியை வலியுறுத்தியுள்ளது. 

ஆனால் அதில் தனக்கு விருப்பமில்லை, முனிராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரி கூற, அவரை அங்கேயே காவலர்கள் தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த குமாரி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை மனுவில் எழுதி, அந்த மனுவை கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். அத்துடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த முனிராஜ் மற்றும் தன்னை தாக்கிய காவலர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் முனிராஜால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com