‘என் குடும்பத்திடம் சொல்லாதீங்க’ பட்டதாரியின் பரிதாபம், காவலரின் கரிசனம் !
கோவையில் வேலை தேடி நீதிமன்ற வளாகம் முன்பு மயங்கிய இளைஞரை ஊக்குவித்த போக்குவரத்து காவலருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
கோவை நீதிமன்றம் வளாகம் மாநகர முன்பு ஒருவழிப்பாதையின் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில், போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு தலைமைக் காவலர் மகேஷ்வரன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அங்கு சாலையை கடந்த இளைஞர் ஒருவர் வெயிலின் தாக்கத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட மகேஷ்வரன், அந்த இளைஞரை மீட்டு முதலுதவி செய்தார்.
பின்னர் மயக்கம் தெளிந்து பேசிய அந்த இளைஞர், “மருத்துவமனை எல்லாம் வேண்டாம், ஒரு சாக்லேட் மட்டும் வாங்கி கொடுங்க” என்று கேட்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தை தன் குடும்பத்திடம் கூற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த இளைஞர் நிலைகுறித்து காவலர் கேட்ட போது, தான் வேலை தேடும் இளைஞர் என்றும், குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடி அலைவதையும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கு உணவு வாங்கிக் கொடுத்த அந்தக் காவலர், வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவ, இளைஞர்கள் உட்பட அனைவரும் காவலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சில காவலர்கள் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டாலும், அனைத்து காவலர்கள் அவ்வாறு கிடையாது, பல நல் உள்ளங்களும் இருக்கிறது என்பதற்கு போக்குவரத்து காவலர் மகேஸ்வரன் ஒரு உதாரணம் எனக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.