மகன் மரணத்திற்கு போராடும் தந்தை: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

மகன் மரணத்திற்கு போராடும் தந்தை: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
மகன் மரணத்திற்கு போராடும் தந்தை: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் மர்மமாக உயிரிழந்த மாணவரின் வழக்கில், அவரது தந்தையின் மனுவில் முகாந்திரம் உள்ளதா என விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்காளம் சித்தாரஞ்சன் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் உண்ணத் சைமன் மின்ஸ். இவர் கலந்தாய்வின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு கோவை ஆலந்துறை அடுத்த காருண்யா பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். ஒரு வருடம் கடந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி விடுதி அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். 
இதுதொடர்பான வழக்கு கோவை 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல மாதங்களாகியும் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்காததால், உயிரிழந்த மாணவனின் தந்தை லாரன்ஸ் சலீம் மின்ஸ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த காருண்யா நகர் காவல்துறை, அபிஷேக் வயிற்று வலியால் தேர்விற்கு செல்ல முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தெரிவித்தது. 

இதையடுத்து வழக்கை முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் மாணவரின் தந்தை கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரித்த நீதிமன்றம், சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. அதனடிப்படையில் காவல்துறையின் அறிவிப்பை ரத்து செய்யவும், வழக்கை மீண்டும் விசாரிக்கவும் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், “மாணவனின் பெற்றோர்கள் உட்பட வழக்கில் சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை. மாணவர் தங்கியிருந்த அறை எண் மாற்றி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தின் விடுதி காப்பாளர் சார்பில் அளிக்கப்பட்ட புகார் கடித்தத்தில் மாணவனின் உயிரிழப்பு தற்கொலை என ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவன் பயன்படுத்திய ஏடிஎம், பேன் கார்டு போன்ற உடமைகள் காணாமல் போனது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை” என 12 சந்தேகங்களை எழுப்பினார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், தந்தை எழுப்பிய குற்றச்சாட்டுகள் மீது முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் குற்றச்சாட்டு காவல்துறை மீது கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களையே விசாரிக்க உத்தரவிட்டுள்ளது ஏற்புடையது இல்லையென்பதால் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மாணவனின் தந்தை சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com