லாட்டரி சீட்டு புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்
கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது, புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்தது.
கோவை பேரூர் பகுதியில், பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சிறிய பாதையில், தகரத்தால் ஆன அறையில் குலுக்கல் லாட்டரி சீட்டுக்கான தொகை வசூலிக்கப்படுகிறது. ஒரு துண்டுச் சீட்டில் மூன்று எண்களும், தேதியும் எழுதப்படுவதுடன், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட லாட்டரி சீட்டின் குறியீடும், குறித்து தரப்படுகிறது. லாட்டரி சீட்டில் உள்ள 6 இலக்க எண்களில் கடைசி மூன்று எண்களை மட்டும் துண்டுச்சீட்டில் எழுதித்தரப்படுகிறது. இதையடுத்து பிற்பகல் மூன்று மணி அளவில் குலுக்கல் முடிவுகள் தெரியவருகிறது.
இதுகுறித்து புதிய தலைமுறை கள ஆய்வு நடத்திய போது, லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். லாட்டரி விற்பனை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்தி புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.