”கொரோனாவைவிட உயிர்தான் முக்கியம்” அடிபட்ட தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

”கொரோனாவைவிட உயிர்தான் முக்கியம்” அடிபட்ட தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

”கொரோனாவைவிட உயிர்தான் முக்கியம்” அடிபட்ட தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்
Published on

விபத்து ஒன்றில் அடிபட்டு வயிற்றுப்பகுதி கிழிந்து இறக்கும் தருவாயில் இருந்த புலம்பெயர் தொழிலாளி விக்ரம்குமாரை துரிதமாக செயல்பட்டு கோவை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலன் ராவின் மகன் விக்ரம்குமார் (20). கடந்த ஒரு வாரத்துக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய விக்ரம்குமாருக்கு, குடலில் துளை ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, குடலோடு குடல் இணைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் கசிவு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவருக்கு, கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டார். இதனால் மீண்டும் அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

விக்ரம்குமாரை அனுமதித்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் பரிசோதனை முடிவுக்கு காத்திராமல் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6.30 மணி வரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், பெரிய அறுவை சிகிச்சை என்பதால் விக்ரம்குமார் உடனடியாக மயக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை என்றும், ஒருநாள் முழுவதும் அவருக்கு செயற்கை சுவாசம், அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் காளிதாஸ் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்குப்பிறகுதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும், அவசர காலத்தில் மருத்துவர்கள் துணிந்து பணியாற்றியதால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்றுவந்த நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com