மேட்டுப்பாளையம் அருகே சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி, கார்களை பெண் யானை சேதப்படுத்தியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப்பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் பெரிய பெண் யானையொன்று நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் பொதுமக்களை விரட்டியது. யானைக்கு பயந்து வாகனங்களை விட்டு விட்டு ஓடியவர்களின் வண்டிகளையும் அது ஆவேசத்துடன் உடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியும் மீண்டும் மீண்டும் அந்த யானை சாலைப்பகுதிக்கே வந்ததுடன், வனத்துறையினரையும் விரட்டியது. சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு யானை விரட்டப்பட்டது.
இதன் பின்னர் யானை நின்றிருந்த சாலையின் அருகே இருந்த புதர் பகுதிக்கு சென்ற வனத்துறையினர், அங்கு நடக்க இயலாமல் பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குட்டியானை இருப்பதை கண்டனர். இதற்காகவே தாய்யானை அங்கிருந்த விலக மறுத்து அனைவரையும் துரத்தியுள்ளது என்பதையும் வனத்துறையினர் அறிந்தனர். இதையடுத்து உடனடியாக குட்டியை மீட்டு பலவீனமாக காணப்பட்ட குட்டியானைக்கு தண்ணீர் மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் விரட்டியடிக்கப்பட்டதால் ஓடி சென்ற தாய் யானையை இருக்கும் இடத்தை கண்டறிந்து, அதனுடன் அதன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.