தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்
கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி, ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
கோவை ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்யா. இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் வரவே, அதிர்ச்சியடைந்த மாணவி உயிர்பிழைக்க தண்டவாளத்திலிருந்து தாவிக்குதித்துள்ளார். ஆனால் ரயில் வேகத்தின் ஈர்ப்பால் இழுக்கப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த மாணவி சௌந்தர்யாவை கண்ட அப்பகுதி மக்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

