‘காதல் மனைவியை மீட்டுத்தாருங்கள்’: சாதி மறுப்பு திருமணம் செய்த கணவர் நீதிமன்றத்தில் மனு
கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மீட்டுத்தரக்கோரி அவரது கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும், அவருடன் வேலை பார்த்த சக்தி தமிழினி என்பருக்கும் கடந்த 5ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இவர்களின் காதல் திருமணத்திற்கு சக்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 19ஆம் தேதி வீட்டில் இருந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய தாயை தாக்கி சக்தி தமிழினி கடத்தப்பட்டார்.
தன்னுடைய காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சக்தி தமிழினியின் தந்தை அடியாட்களை கொண்டு தன்னையும், தன் தாயையும் தாக்கி தமிழினியை கடத்தி சென்றதாகவும், தற்போது அவருக்கு வேறு திருமணம் நடத்த முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனி அறையில் அடைக்கப்படுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை உடனே மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.