மோசடி வழக்கு: நேரில் ஆஜராக விஜயசாந்திக்கு உத்தரவு
மோசடி தொடர்பான வழக்கில் சமரசம் செய்து கொள்ளும் முடிவை நேரில் ஆஜராகி தெரிவிக்கும்படி நடிகை விஜயசாந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள நிலத்தை 5 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இந்தர்சந்த் ஜெயின் என்பவருக்கு விற்க ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட நடிகை விஜயசாந்தி, அதற்காக 4 கோடியே 68 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகk கூறப்படுகிறது. பின்னர் முன்னறிவிப்பு இல்லாமல் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விஜயசாந்தி விற்பனை செய்துள்ளார். இதனால் இந்தர்சந்த் ஜெயின் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஜயசாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் சமரசம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தனர். எனினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி சம்பந்தப்பட்ட இருவரும் வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.