விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!
சென்னை புளியந்தோப்பில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வயதான பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து காவல்துறையினர் சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு சென்னை சிறார் நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். அதன்படி சிறுவனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் அமல்படுத்தினர். சென்னை சேத்துப்பட்டு ஈகா தியேட்டர் சிக்னலில் அச்சிறுவன் போக்குவரத்தை ஒழுங்குபடித்தும் பணியில் ஈடுபட்டார்.