திருநங்கையாக மாறிய கணவர்.. மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது - நீதிமன்றம்
கணவர் திருநங்கையாக மாறியதால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த மணிமேகலை என்ற பெண் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “1998ஆம் ஆண்டு எனக்கும் ராமானுஜம் என்பவருக்கும் திருமணமானது. ஆனால் எங்களுக்குள் எந்த தாம்பத்ய உறவும் ஏற்படவில்லை.
அவருக்கு மருத்துவ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. 2009-ஆம் ஆண்டு என்னை அடித்து துண்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். எனவே, எனக்கு ஒரு வீடு, ரூ.10 லட்சம், மாதம்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணைக்காக ஆஜரான ராமானுஜம், தான் திருநங்கையாக மாறிவிட்டதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமணம் நடந்துவிட்டது என்பதாலேயே ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிடமுடியாது எனவும் ராமானுஜம் பிச்சை எடுப்பதாகவும் அரசின் ஆதரவில் இருப்பதாகவும் கூறியிருப்பதால், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி உத்தரவிட்டார்.