விடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம்? - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி
மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு பட்டியலினத்தவரை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட ஏழு பேரை, 1997-ல் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு கடுமையாக அதிருப்தியை தெரிவித்தனர்.
அதில், உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட 13 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. ஆனால் இதுவரை அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை. உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசு கவனமாக கையாள வேண்டும். இவ்வளவு வேகமாக அவர்களை விடுதலை செய்ய வேண்டிய அவசரம் என்ன? அவர்கள் சமூகத்திற்கு அவ்வளவு முக்கியமானவர்களா? 7 பேரை கொன்றவர்கள் 10 ஆண்டுகளில் மிக எளிதாக விடுதலையாகியுள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்து அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நீதிமன்றம் மிகவும் வருத்தம் கொள்கிறது. ஆகவே, தொடர்புடைய அதிகாரிகள் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணை, விடுதலை செய்யப்பட்டவர்களின் தற்போதைய முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர். மேலும்
மனித உயிர் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கும் இப்படித்தான் கையாளப்பட்டது. இவை சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.