\
Court Orders Removal of Udhayanidhi Stalin's Remarks on TVK MLA Case
உதயநிதி ஸ்டாலின்Pt web

தவெக எம்.எல்.ஏ. விவகாரம்; உதயநிதி பேட்டிகளை நீக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

தவெக எம்.எல்.ஏ. பாலியல் வழக்கு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிகளை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: 

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையில், நேற்றைய தின விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் வரை வழக்கின் விசாரணை விவரங்களை பொது வெளியில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்தச்சூழலில் தான், மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசுத் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உண்மைக்குப் புறம்பான அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக முறையிட்டார்.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Court Orders Removal of Udhayanidhi Stalin's Remarks on TVK MLA Case
“உயிரோடு விட்டதற்கு நன்றி!” – பாடகி சின்மயி சரமாரிக் கேள்வி!