அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 1996 ஆம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கையெழுத்து இடவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியாமல் உள்ளது என்றும் வாதிட்டார்.
இந்நிலையில் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிசம்பர் 13 ஆம் தேதி நேரில் அழைத்து வர சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்தும் ஆணையிட்டார். இதனிடையே கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போயஸ்கார்டன் இல்லம், சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.இதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.