ஓபிஎஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் தம்பி ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
Published on

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தம்பியான ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் வடகரை காவல்நிலையத்திற்கு பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நகர பொதுச் செயலாளராக இருப்பவர் துரை. நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு முறை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வந்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2018 அக்டோபர் 21-ம் தேதி மர்ம நபர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தன்னைத் தாக்கியது ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் ஆட்கள் எனத் தொடர்ச்சியாக கூறிவந்த துரை,  ஓ.ராஜா மற்றும் நாய் சேகர், குண்டாஸ் சுரேஷ், கல்லுப்பட்டி சசி, தென்கரை சசி போன்றவர்கள் மீது பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்குப்பதிவு செய்யாமல் புகார் மனுவுக்கான ரசீது மட்டும் போட்டு அனுப்பிவிட்டனர். அதிலும் ஓ.ராஜாவின் பெயர் இல்லை.

இதனால் அதிருப்தியடைந்த துரை, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார். இருந்தும் எந்தப் பலனும் இல்லை. இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் ஓ.ராஜா தரப்பு ஆட்கள், ரேஷன் கடைகளின் பொருள்களைக் கொள்ளையடிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார் துரை. இதனால் கோபமடைந்த ஓ.ராஜா, துரைக்குப் போன் செய்து மிரட்டினார். அந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தன்னை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் காவல்நிலையத்தை அறிவுறுத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார் துரை.

வழக்கானது பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஓ.ராஜா உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் ஓ.ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது தேனி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com