அமெரிக்க மணமகன் - தமிழ் மணமகளின் ‘வீடியோ கான்பரன்ஸ்’ திருமணம் செல்லுமா? புதிய உத்தரவு

அமெரிக்க மணமகன் - தமிழ் மணமகளின் ‘வீடியோ கான்பரன்ஸ்’ திருமணம் செல்லுமா? புதிய உத்தரவு
அமெரிக்க மணமகன் - தமிழ் மணமகளின் ‘வீடியோ கான்பரன்ஸ்’ திருமணம் செல்லுமா? புதிய உத்தரவு

அமெரிக்காவில் இருக்கும் காதலனுடன் காணொலி மூலம் நடக்கும் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த வாஷ்மி சுதர்ஷினி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் “நானும், அமெரிக்காவைச் சேர்ந்த ராகுல் மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணம் இல்லாமல் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.

இதற்கிடையே விசா காலம் முடிந்ததால் ராகுல் அமெரிக்கா சென்று விட்டார். தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல் உள்ளது. என்னாலும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் (வீடியோ கான்பரன்ஸ்) காணொலி வாயிலாக திருமணம் செய்யவும், எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, “திருமண பதிவு சட்டத்தில், 'காணொலியில் திருமணம் நடைபெறக்கூடாது’ என சொல்லப்படவில்லை. சார் பதிவாளர் முன்பு மனுதாரர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். இருவருக்கும் அப்போது திருமணம் செய்து வைத்திருந்தால் இப்பிரச்னை வந்திருக்காது. அதிகாரிகளின் தவறால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மனுதாரர் காணொலி வழியாக அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கெனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார். இதனால் திருமண பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் சார்பில் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ''தனி நீதிபதியின் உத்தரவு சிறப்பு திருமண பதிவுச் சட்டத்தின் பிரிவு 12 மற்றும் 13ன் படி ஏற்புடையதல்ல. நீண்ட விவாதத்திற்கு பின் முடிவு எடுக்க வேண்டிய விவகாரத்தில் அவசரமாக எந்த முடிவுக்கும் வர முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு தொடர்பாக வாஷ்மி சுதர்ஷினி தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com