கூடுதல் கட்டணம் வசூலித்த ரோகிணி திரையரங்கத்திற்கு 15 ஆயிரம் அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலித்த ரோகிணி திரையரங்கத்திற்கு 15 ஆயிரம் அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலித்த ரோகிணி திரையரங்கத்திற்கு 15 ஆயிரம் அபராதம்
Published on

அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் கட்டணம் வசூலித்த சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கம், இழப்பீடு மற்றும் அபராதமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங்க காம்ப்ளக்ஸில் உள்ள திரையரங்கில் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 100 ரூபாயும் மட்டுமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டிபிளக்ஸ் வகையில் இல்லாத நிலையிலும், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி என்ற நிலையிலும் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  பண்டிகை நாட்களிலும், பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போதும் முதல் மூன்று நாட்களில் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த செம்பியம் தேவராஜன் என்பவர், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தபோது, டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய், முன்பதிவு கட்டணமாக 35 ரூபாய் 40 பைசா என மொத்தமாக 185 ரூபாய் 40 பைசாவை கணக்கிலிருந்து பிடித்தம் செய்துள்ளனர்.

இதையடுத்து ரோகிணி திரையரங்கின் கூடுதல் கட்டண வசூலால் தனக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், கூடுதலாக வசூலித்த கட்டணத்தையும் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் செம்பியம் தேவராஜன் புகாரை பதிவு செய்தார். இந்தப் புகாரை விசாரித்த தலைவர் லட்சுமிகாந்தம், உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்ட 110 ரூபாயையும்,  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கான இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும், கூடுதல் கட்டண வசூலுக்கான அபராதமாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்க ரோகிணி திரையரங்கத்திற்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com