”லஞ்சம் பெற்ற முகாந்திரம் உள்ளது “ - அன்பில் மகேஸ் வழக்கில் நீதிமன்றம் கறார்!
சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபராக இருக்கக் கூடியவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கும் என்ற காவல் துறை வாதத்தை புறந்தள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. அன்பில் மகேஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. வழக்கில் நீதிபதிகள் பேசியது என்ன?. பார்க்கலாம்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரை வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இடைபட்ட காலத்தில் காவல் துறையும் அன்பில் மகேஸை விசாரணைக்கு எடுத்திருந்தது.
இந்நிலையில், ஜாமீன் கோரி கடந்த 5 ஆம் தேதி ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கை நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி விசாரித்தார். அப்போது, வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் அன்பில் மகேஸை தொடர்புபடுத்த ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது.
அரசகுமார், முத்துகுமார் ஆகியோர், அங்கீகாரம் பெறுவதற்காக தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலித்து, கட்சி நிதி என்ற பெயரில் அன்பில் மகேஸுக்கு லஞ்சமாக வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை சாட்சியங்கள் வாக்குமூலமாக அளித்துள்ளன என தெரிவித்த நீதிபதிகள், வழக்கில், அன்பில் மகேஸ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும் “வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. மேலும், சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபரான மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கும் என்ற காவல்துறையின் வாதத்தை புறந்தள்ளிவிட முடியாது. மோசடி, மிரட்டல், கட்சி நிதி என்ற பெயரில் பெருந்தொகை வசூலித்தது பொருளாதார குற்றம். நாட்டின் எதிர்கால சந்ததிக்கு, சிறந்த கல்வியை வழங்கக்கூடிய துறைக்கு அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஸுக்கு தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது” எனவும் கூறி ஜாமீன் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

