பாலாற்றில் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணை கோரி வழக்கு - அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

பாலாற்றில் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணை கோரி வழக்கு - அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி
பாலாற்றில் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணை கோரி வழக்கு - அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி

பாலாற்றில் ஒவ்வொரு 10 கிலோமீட்டர் இடைவெளியில் தடுப்பணைகளை கட்டக் கோரிய வழக்கை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க் என்ற இடத்தில் உருவாகும் பாலாறு நதி கர்நாடகாவில் 90 கிலோமீட்டரும், ஆந்திராவில் 32 கிலோமீட்டரும் கடந்து, தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் நுழைந்து 222 கிலோமீட்டர் பாய்ந்து கூவத்தூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. தமிழகத்தில் பாலாற்றில் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தடுப்பணைகள் கட்ட உத்தரவிடக் கோரி லோக் தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் மாநில தலைவரான, சென்னை அடையாறைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் விவசாயிகள் பாலாற்றின் தண்ணீரை நம்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவும், ஆந்திராவும் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், அவற்றை மீறி தமிழகத்திற்குள் வரும் நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படாததால், மழைக்காலங்களில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர், கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டுமென 2021ஆம் ஆண்டு நவம்பர் 27இல் மனு அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மனுவை பரிசீலித்து, பாலாற்று நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வு, பாலாற்றில் எவ்வளவு தண்ணீர் வருகிறது, எந்தெந்த இடங்களில் தடுப்பணை அமைக்க முடியும் என்ற விவரங்களை குறிப்பிடாமலும், முறையாக ஆய்வு செய்யாமலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது. மேலும், தடுப்பணைகள் எங்கெங்கு கட்டப்பட வேண்டும் என்பதை அரசு தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெளிவுபடுத்திய நீதிபதிகள், விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com