முதல்வர், அமைச்சர்களுக்கு எதிரான மனு - தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செயப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார்கள் அடிப்படையில் அவர்களை தகுதி நீக்கம் செய்து, விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் டிராபிக் ராமசாமி கோரி இருந்தார். மேலும் இதில் ஆளுநர் தலையிட்டு முதல்வர் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தொடர்ந்த வழக்கில் போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்வது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.