தபால் வாக்குப்பதிவு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு

தபால் வாக்குப்பதிவு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு
தபால் வாக்குப்பதிவு குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றம் முடித்துவைப்பு

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் முழுமையாக வாக்களிப்பதை உறுதி செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக கூறி, அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது எனவும், தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் அளித்த  விளக்கத்தை ஏற்று, அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட்டது. மேலும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி,  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு பதிவு செய்வதற்காக எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். மேலும், தபால் வாக்குப்பதிவு செய்ய விண்ணப்பித்த 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டும்  நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது 0.3 சதவீதம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், தலைமைத் தேர்தல் அதிகாரியின் மனு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக தெரியவில்லை எனவும் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

மேலும், மிகப்பெரிய பணியான தேர்தல் நடத்தும் பணியில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com