செய்யாத குற்றத்திற்கு தண்டனையா? - மாணவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்ட வழக்கில் சம்பவத்தன்று அந்த இடத்திலேயே இல்லை என்பதற்கான ஆதாரம் சமர்பிக்கப்பட்டதால் மாணவர் ஒருவருக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை அமைந்தகரையில் கடந்த 23ஆம் தேதி ஓடும் பேருந்தை நிறுத்தி பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் மோதிக்கொண்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதன், ஸ்ருதி உள்ளிட்ட 4 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மதனின் பெற்றோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி, மோதல் சம்பவத்தின் போது, தங்களது மகன் மதன் அங்கு இல்லை என்றும் அன்றைய தினத்தன்று பெரியபாளையம் ஜெராக்ஸ் கடையில் இருந்ததற்கான சிசிடிவி ஆதாரங்களையும் சமர்பித்தனர்.
இதையடுத்து மாணவர் மதனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லாததால், தனது மகன் 2 மாதமாக கல்லூரிக்கு செல்லாத நிலையில், செய்யாத குற்றத்திற்காக தனது மகனை கைது செய்து சித்தரவதை செய்ததாகவும் மதனின் தாயார் வேதனை தெரிவித்தார்.