சாப்பாடு இல்லை என போன் செய்த தம்பதியர்: 1 மணி நேரத்தில் உணவளித்த மாநகராட்சி ஊழியர்கள்
சாப்பாடு இல்லையென சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட வயதான தம்பதியினருக்கு ஒருமணி நேரத்தில் உணவு வழங்கிய மாநகராட்சி ஊழியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம்.காலனியில் சுந்தரமூர்த்தி (64), சுகுணா (53) என்ற வயதான தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனமழையால் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் சாப்பிடவும் கையில் பணம் இல்லை. ஆகையால் ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
கையில் பணம் இல்லை ஆகையால் நாங்கள் பட்டினியோடு உள்ளோம் எனவும், தங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து, ஜி.கே.எம் காலனி அருகே பணியிலிருந்த மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மதிய உணவு உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் அவர்களது வீட்டிற்கே சென்று உணவு வழங்கினர். இந்த மழை நேரத்தில் தக்க சமயத்தில் உணவு வழங்கிய மாநகராட்சி அதிகாரிகளை நினைத்து அந்த தம்பதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.