தனிக்குடித்தனம் செல்ல எதிர்ப்பு? : விரக்தியில் இளம் தம்பதி தற்கொலை
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனிக்குடித்தனம் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் தம்பதி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொண்ணான்டம்பாளையத்தைச் சேர்ந்த கேசவராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் உதகையைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் கேசவராஜின் பெற்றோருடன் வசித்து வந்தனர். மாமனார் - மாமியாருடன் சேர்ந்திருக்க விரும்பாத கிருத்திகா தனிக்குடித்தனம் செல்ல ஆசைப்பட்டதாகவும் அதற்கு கேசவராஜ் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல கேசவராஜின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கேசவராஜ் தம்பதி மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உறங்கச் சென்ற கேசவராஜும் கிருத்திகாவும் புதன்கிழமை காலை 9 மணிக்கு மேலாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறை சன்னலை உடைத்து பார்த்த போது, கேசவராஜும் கிருத்திகாவும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். குடும்பப் பிரச்னையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.