ஊழலில் திளைக்கும் பத்திரப் பதிவுத்துறை: நீதிபதி அடுக்கடுக்காக கேள்வி
ஊழலில் திளைக்கும் துறையாக பத்திர பதிவுத்துறை உள்ளது என்றும், லஞ்சம் இல்லாமல் சார் ஆட்சியர் அலுவலகங்கலில் எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த பூபதி என்பவர் தொடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் இவ்வாறு கூறினார். பத்திரப் பதிவுத்துறை ஊழலில் திளைக்கும் துறையாக உள்ளதாக கூறிய நீதிபதி கிருபாகரன், லஞ்சம் கொடுக்காமல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏதும் நடக்காது என்ற சூழல் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த லஞ்சத்தைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் வணிகவரித்துறை செயலாளரையும், டி.ஜி.பியையும் எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதோடு 10 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் முன்வைத்தார்.
அதில், மூன்று வாரங்களில் பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது திரும்ப கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பம்மல் சார்பதிவாளர் ஓராண்டுக்கு மேல் ஆவணங்களை வைத்திருந்து ஏன்? என்றும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம்ப்பணத்தை பெற்று கொடுக்க தரகர்கள் இருப்பது அரசுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகிறதா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டன? எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். அவற்றிற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 4ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.