“பொன்மலை ரயில்வே பணிநியமனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்” - இளைஞர்கள் வேதனை

“பொன்மலை ரயில்வே பணிநியமனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்” - இளைஞர்கள் வேதனை
“பொன்மலை ரயில்வே பணிநியமனத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்” - இளைஞர்கள் வேதனை

தென்னக ரயில்வேயின் மிகப்பெரிய பணிமனையாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை (ஆர்மரி கேட்) விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்கள் இந்திய ரயில்வே மட்டுமல்லாது, உலக அளவில் புகழ் பெற்றவை. இந்த ரயில்வே பணிமனையில் பணியாற்றும் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3,800. அதில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 1,200. கிட்டத்தட்ட சரிசமமான எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் பணிபுரிவது புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பணிமனையில் தொழில் பழகுனருக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.

அதற்கு விண்ணப்பித்த 8000 விண்ணப்பங்களில், 5000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள். மொத்தம் 1,765 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச தகுதி 10ம் வகுப்பு. இதில் 1,600 இடங்களை வட மாநில இளைஞர்கள் வாரி சுருட்டியுள்ளனர். 10 சதவீதத்திற்கும் குறைவாக வெறும் 165 இடங்களை மட்டுமே தமிழக இளைஞர்கள் தக்க வைத்துள்ளனர்.

ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களான, திருச்சி 'பெல்' எனப்படும் பி.ஹெச்.இ.எல்., துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்.ஏ.பி.பி., தொழிற்சாலைகளில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், தென்னக ரயில்வே பணிமனையில் நடந்த இந்த தொழில் பழகுனர் தேர்வு, தமிழக இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தும், வேலை கிடைக்காத 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். "வடமாநிலத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் துணையுடன், தொடர்ச்சியாக தமிழகத்தில் இதுபோன்ற பணி நியமனங்கள் நடந்து வருகின்றன. 

எங்களது வேலை வாய்ப்பை அவர்கள் தட்டி பறிப்பதால், நன்கு படித்திருந்தும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுச் செய்தும், வேலையில்லாமல் திரிய வேண்டிய அவல நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்தப் பணிமணை பணி நியமனம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினர். 

தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கு, தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை என்ற வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால், இன்று குறைதீர்க்கும் கூட்டம் நடக்கவில்லை. எனவே, ஆட்சியர் அலுவலகம் முன் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com