திமுக ஆட்சியில் ஊழல்.. ரூ 3.3 லட்சம் கோடி முதலீடுகள் வெளியேறின - அமைச்சர் கீர்த்தனா
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் சட்டசபையில் நடந்தது.
இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளன எனும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா முந்தைய திமுக ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் 25 நிறுவனங்கள் மகாராஷ்டிரா, ஒடிசா , குஜராத் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றதாகாவும் அதனால் 2 லட்சத்து 3000 பேருக்கான வேலை வாய்ப்புகளை இழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெகவின் 40 நாட்கள் ஆட்சியில் எந்த முதலீட்டு நிறுவனங்களும் தமிழ்நாட்டைத் தவிர்த்துவிட்டு வேறுமாநிலங்களுக்கு செல்லவில்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்
முந்தைய ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால்தான் இரண்டு பெரிய தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்குச் சென்றதாகக் குற்றம் சாட்டினார். அதாவது திமுக அரசின் ஊழல் காரணமாக பல நிறுவனக்கள் வெளியேறியுள்ளன என்றார்.
மேலும், தற்போது தங்கள் தலைமையிலான புதிய அரசு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 21 நாட்களில் அனுமதிகள், ஒற்றைச் சாளர முறை, மற்றும் வேகமான செயல்பாடுகளை அமல்படுத்தி வருவதாகவும், ஹூண்டாய் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

