நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊழல் சீர்குலைக்கிறது - உயர்நீதிமன்ற கிளை

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊழல் சீர்குலைக்கிறது - உயர்நீதிமன்ற கிளை
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை ஊழல் சீர்குலைக்கிறது - உயர்நீதிமன்ற கிளை

ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் ஆழமானது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'அரசு பணியில் சேர்வது முதல் இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வு வரை ஊழல் மற்றும் லஞ்சம் பெருமளவில் காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கும்போது தங்களது மூத்த அதிகாரிகளிடம் உரிய தகவலை வழங்க வேண்டும். வீடு கட்டுவது, விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு கூட உயர் அதிகாரிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்களின் கடமையை செய்ய யாரிடமும் பணமோ, பொருளோ வேறு ஏதேனும் பலனோ செய்யுமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. இது விதிகளிலும் உள்ளது. ஆனால், லஞ்சம் வழங்கினால் மட்டுமே அரசுத் துறைகளில் பணி விரைவில் முடியும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது. பெரும்பாலான உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடும் கீழமை அதிகாரிகளை பாதுகாக்கும் வகையிலேயே செயல்படுகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுபோல குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளின் வீடுகளில் முறையாக ஆய்வு மேற்கொள்வதில்லை.

இதனால், அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றி தொடர்ச்சியாக ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் துணையோடு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி இந்த அதிகாரிகள் தப்பித்து விடுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கான உரிமம் வழங்குவது, மேகமலையில் மரங்களை வெட்டுவது, டிஎன்பிஎஸ்சி பணியிடங்களை நிரப்புவது, மதிய உணவு திட்டத்திற்கான முட்டைகளை வாங்குவது என பல விஷயங்களிலும் ஏராளமான முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளன.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஊழல் முறைகேட்டில் பங்குள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே ஊழல் தடுக்கப்படும். ஆகவே மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு துறைகளில் நடைபெறும் ஊழல் மற்றும் சட்டவிரோதங்கள் குறித்து கண்காணிக்க சிறப்பு பறக்கும் படையை அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அனுப்பப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கோ, அலுவலருக்கோ அனுப்பப்படக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரைசுவாமி அமர்வு, ஊழல் பொருளாதாரத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் சீர் குலைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் ஆழமானது. சாதாரண மனிதர்களும் எளிமையானது என்பதால் குறுக்கு வழியை ஊக்குவிக்கின்றனர் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com