சென்னையில் 28 ஆயிரம் கட்டடங்களுக்கு பட்டா இல்லை - கணக்கெடுப்பில் தகவல்
சென்னையில் சுமார் 28 ஆயிரம் கட்டடங்கள் பட்டா இல்லாத நிலங்களில் கட்டப்பட்டுள்ள விவரம் மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 16 தாலுகாக்களில் உள்ள கட்டடங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. அதில், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 28ஆயிரத்து 700 கட்டடங்கள் பட்டா இல்லாமல் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விவரங்களை அரசுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆட்சேபனையில்லாத நிலங்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.