‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை

‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை
‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை

சென்னையின் பல முக்கியப் பேருந்து நிறுத்துமிடங்களில் நிழற்குடைகள் இன்றியும், கழிப்பிடங்கள் இன்றியும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னைக்கு “சிங்காரச் சென்னை” என்ற புகழ்ச்சிப் பெயர் உள்ளது. சென்னையில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளது என அரசியல்வாதிகள் அனைத்து மேடைகளிலும் பேசுகின்றனர். உலக அளவில் சென்னை உயர்ந்துவிட்டதாகவும், மெட்ரோ ரயில், விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் உள்ளதாகவும் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் பெருமை பேசுகின்றன. சென்னையில் நவீன கழிப்பிடங்கள் பல கட்டப்பட்டுள்ளன எனவும், நிழற்குடைகள் நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஆனால் பல முக்கிய இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லை. தற்போது கோடைக்கலாம் என்பதால் சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் வெயில் குறைந்து காணப்படுகிறது. அப்படியென்றால் மழையில் நிற்பதற்குக்கூட நிழற் குடைகள் இல்லை. மழையோ, வெயிலோ அனைத்திலும் சிரமப்பட்டு தான் அரசுப் பேருந்தில் பயணிக்கின்றனர் மக்கள். இதுதொடர்பாக புதிய தலைமுறை இணையதளம் சார்பில் களத்திற்கு சென்று தகவல்களை சேகரித்தோம்.

போரூர் பகுதிக்கு சென்றபோது, அங்கு புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் கீழ் ஆற்காடு சாலை செல்லும் பகுதியில் பலர் பேருந்திற்காக சென்றுக் கொண்டிருந்தனர். நிழற்குடை இல்லை. வெயில் அடித்துக்கொண்டிருந்தது. கீழே சேறும், சகதியுமாய் இருக்க அங்கு பேருந்தின் வருகையை எதிர்பார்த்து காத்திக்கொண்டிருந்தனர் மக்கள். 

வடபழனியின் முக்கிய அடையாளம் என்று கூறவேண்டுமென்றால் அது வடபழனி முருகன் கோவில்தான். அந்த முருகன் கோவில் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லை. கோவிலுக்கு முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் என குடும்பத்துடன் வந்து செல்பவர்கள் வெயிலில் நின்று தான் பேருந்தில் ஏறிச்செல்கின்றனர். இதேபோன்று அந்தப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில இடங்களிலும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லை.

சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று சைதாப்பேட்டை. பல புகழ்ச்சிகளுக்கு உரிய இடமாகவும் இது உள்ளது. அங்குள்ள பிரதான பேருந்து நிலையத்தில் கழிவறை இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வந்துச் செல்லும் இடமாக உள்ளது. அத்துடன் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட, தாய் சேய்க்கு பாலூட்டும் அறை உள்ளது. 

ஆனால் அது திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது என அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர் அங்கு வந்துச் செல்லும் மக்கள். பசியால் அழுகும் குழந்தைகளின் பசியை போக்குவதற்கு அரசால் தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் அறை மூடப்பட்டிருப்பது பெரும் வேதனை என தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அங்கு உள்ள பழைய பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகளின் கூடாரமாக உள்ளது. அங்கு கழிவறைகள் இல்லாத காரணத்தால் பேருந்து நிலையத்தின் சுவரையே பலர் சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்துகின்றனர்.

சைதாப்பேட்டை பேருந்து நிலையம் மட்டுமின்றி சென்னை பல பேருந்து நிலையங்களின் சுவர்கள் திறந்த வெளிப் பொதுக்கழிப்பிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அதனால் சுகாதார சீர்கேடும், நோய் தொற்றும் அபாயமும் உள்ளது என்பதே உண்மை. இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறுகையில், நிழற்குடைகள் இல்லாததை கூடப் பொறுத்துக்கொள்ள முடியும் ஆனால் அவசர நேரங்களில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லாதது தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என உருக்கமாக கூறுகின்றனர். முதியவர்கள், பெண்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது உண்மையிலேயே பெரும் சிரமம் தான். 

மாநகராட்சியின் அறிவிப்புப்படி, சென்னையில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் 9,200 இருக்கைகள் கொண்ட நவீன கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டிற்குள் புதிதாக 479 கழிவறைகள் கட்டப்படவுள்ளதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால் அவை நவீனமாக அல்ல சுகாதாரமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய சென்றோம். சில கழிப்பிடங்களை ஆய்வு செய்த போது மூச்சு முட்டும் அளவிற்கு துர்நாற்றம் குடலைப் பிரட்டியது. உள்ளேயே செல்ல முடியவில்லை. 

இதுகுறித்து மக்கள் கூறும் போது, பல மாதங்களாக இந்த கழிவறைகள் இப்படித்தான் இருக்கின்றன. இதனால் பயன் ஏற்பட்டதோ, இல்லையோ? ஆனால் மழைக்காலத்தில் கழிவறைகளின் உள்ளே இருக்கும் கழிவுகள் வெளியேறி துர்நாற்றம், நோய்களும் ஏற்பட்டது என்கின்றனர். மேலும் இதனை அரசும், மாநகராட்சி நிர்வாகமும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் சென்னை உண்மையிலேயே சிங்காரச் சென்னையாய் மிளிறும் எனக் கூறுகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com