சென்னை மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங்! ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!

சென்னை மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங்! ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!
சென்னை மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங்! ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!

சென்னை நகரில் மழை நீர் தேங்குவதை கண்காணிக்க கிளவுட் சோர்சிங் மூலம் வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புவதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கைக்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

200 வார்டுகளும் 15 மண்டலங்களும் கொண்ட சென்னை மாநகராட்சி கடந்த 20 வருடங்களில் திட்டமிடப்படாமல் அப்போதைய தேவைக்கு ஏற்றார் போல உருவாக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்கள் எழுவதும் வழக்கமாகி வந்தது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்திற்கு பிறகு வெள்ள தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகளும், தாழ்வான பகுதிகளும், கால்வாய்களும் மழை நீர் வடிகால்களும் உருவாக்கப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் தேங்கும் நீரை வெளியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி கட்டுமான துறை ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து வாட்ஸ் அப் மூலம் சென்னையில் தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க கிளவுட் சோர்சிங் முறையை தொடங்கியுள்ளனர்.

செயலி மற்றும் இணையதளம் (https://chennaiwaterlogging.org/) என்கிற வலை முகவரி மூலம், சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியோடு மாநகராட்சி பொதுப்பணித்துறை இணைந்து இந்த வெள்ள தடுப்பு திட்டத்தை கிளவுட் சோர்சிங் மூலம் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆங்கிலத்தில் மட்டும் இன்றி பயனாளர்கள் முழுமையாக தகவல்களை தெரிவிக்கும் வகையில் தமிழிலும் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இணைய, +1 (415) 523-8886 என்ற WhatsApp எண்ணை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

கட்டுமான துறை சென்னை ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன் பேசுகையில், “மழை வடிகால் மாதிரிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு மாதிரிகள் ஆகியவற்றை அளவீடு செய்து சரிபார்க்கவும், எங்கள் மாதிரிகள் மீது அதிக நம்பிக்கையைப் பெறவும் மக்கள் அனுப்பும் தகவல் மிகவும் முக்கியமானது.  நம்பகத்தன்மை வாய்ந்த இத்தகைய மாதிரி தகவல், அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல் பிரச்சனைக்குரிய பகுதிகளில் வெள்ள நிவாரணத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

வெள்ளத்தின் இருப்பிடம், நீரின் ஆழம் போன்ற விவரங்களைப் பயனர்கள்/பொதுமக்கள் புகாரளிக்க இந்த தளம் உதவுகிறது, அத்துடன் சென்னை மண்டலம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்ட இடங்களின் புகைப்படங்களை முடிந்தவரை அடிக்கடி விளக்குகிறது. அனைத்து தகவல்களும் நிகழ்நேர வெள்ள வரைபடத்தில் சேகரிக்கப்படுகின்றன” என்றார்

இந்த தளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு, வெள்ள அறிக்கைகள் பற்றிய தரவுகளை சேகரித்து வரிசைப்படுத்துவதன் மூலம் வருங்கால வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் மாநகராட்சி மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீர்வு காண முடியும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com